புதுவை, ஜூலை 13: திருநள்ளாறு குளக்கரையில் விடப்பட்டிருந்த பக்தர்களின் ஆடைகள் ரூ. 13 லட்சத்திற்கு ஏலம் போனது.  புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு சனிக்கிழமை தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நளன் குளத்தில் குளித்துவிட்டு அந்த குளக்கரையிலேயேயும், சிலர் குளத்திலேயும் ஆடைகளை அகற்றி விட்டு செல்கின்றனர்.

இதனால், குளத்தில் உள்ள தண்ணீர் மாசுறுகிறது.  இதனை தடுக்கும் நோக்கில், ஆலய நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி, குளத்தில் குளிக்கும் பக்தர்கள் தங்களது ஆடைகளை கரையில் வீசாமல், அங்கேயே 30 பகுதியில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் போட அறிவுறுத்தப்பட்டது.

அவ்வாறு, நேற்றைய தேதி வரை அகற்றப்பட்ட பக்தர்களின் ஆடைகள் அனைத்தும் நேற்று பொது ஏலம் விடப்பட்டு, ரூ.13 லட்சத்திற்கு ஏலம் போனது. இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரி சுந்தர் கூறுகையில், மாவட்ட கலெக்டர் விக்ரமராஜா ஆலோசனையின் பேரில், துணிகளை ஏலம் எடுத்தவர்கள் தினந்தோறும் ஆடைகளை எடுத்து செல்வார்கள், சனிக்கிழமைகளில் மட்டும் உடனுக்குடன் ஆடைகளை எடுத்து செல்வார்கள் என்று கூறினார்.