திருச்சி, ஜூலை 13: திருச்சி கோட்டத்தில் ரெயில் பெட்டிகளில் பயோ-கழிவறை பொருத்தும் பணி 100 சதவீதம் நிறைவு பெற்று தெற்கு ரெயில்வேயில் முதல் இடத்தை பிடித்துள்ளது.  தெற்கு ரெயில்வேயில் திருச்சி கோட்டத்தில் எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்களில் பயோ-கழிவறை பொருத்தும் பணி கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது.

2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதிக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப் பட்டிருந்தது. திருச்சி கோட்ட ரெயில்வேயில் 49 “டெமு ரெயில் பெட்டிகள் உள்பட மொத்தம் 482 பெட்டிகளில் பயோ-கழிவறை பொருத்தப்பட்டு கடந்த ஜூன் மாதம் 10-ந் தேதி 100 சதவீதம் பணி நிறைவு பெற்றது.

தெற்கு ரெயில்வேயில் சென்னை, திருச்சி, பாலக்காடு, மதுரை, சேலம், திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களில் பயோ-கழிவறை பொருத்தும் பணியை திருச்சி கோட்டம் 100 சதவீதம் நிறைவேற்றி முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த கழிவறை மாற்றும் பணி திருச்சி ஜங்ஷன் யார்டு, விழுப்புரம் யார்டு, பொன்மலை ரெயில்வே பணிமனை, பெரம்பூர் வேகன் பணிமனை ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளது.

ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், ரெயில் பெட்டிகளில் பயோ-கழிவறை பொருத்தியதன் மூலம் ரெயில்வே தண்டவாளங்கள், ரெயில் நிலைய தண்டவாளம் அருகில் மனித கழிவுகள் இல்லை. சுத்தமாகவும், பசுமையாகவும் காணப்படுகிறது. பயோ- கழிவறையில் மனித கழிவுகளை உயர் ரக பாக்டீரியாக்களை கொண்டு மீத்தேன் மற்றும் நீராக மாற்றப்படுகிறது என்றனர்.