தர்மபுரி, ஜூலை 13: தர்மபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் பெண்கள் டாக்டர்முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவியை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையை அணுகி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் எஸ்.மலர்விழி தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக தருமபுரி மாவட்டம் மட்டுமல்லாமல் அருகில் உள்ள சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து தாய்மார்கள் வருகிறார்கள். மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் இதர அரசு மருத்துவமனைகளில் நாளொன்றுக்கு சராசரியாக 43-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டாக்டர்முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் தாய்மார்களுக்கு ரூ.18,000- வழங்கப்படுகிறது.  பிரசவித்த பெண்கள் சத்தான உணவு உண்டு தாய் மற்றும் குழந்தை ஊட்டச்சத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக வழங்கப்படுகிறது. தகுதியுடைய தாய்மார்கள் சம்மந்தபட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் எஸ்.மலர்விழி தெரிவித்துள்ளார்.