கோ-ஆப்டெக்சில் புதிய ஆடைகள் அறிமுகம்

சென்னை

சென்னை,ஜூலை 14: கோ-ஆப்டெக்சில் புதிய ஆடைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை மீதான விவாதத்திற்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலளித்த போது கீழ்க்கண்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன் விபரம் வருமாறு:-வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் பட்டுப்பிரிவு, பருத்திப்பிரிவு மற்றும் அறிஞர் அண்ணா பட்டு நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்தின் கிளை ஆகிய மூன்று பிரிவுகளை உள்ளடக்கிய தர்மபுரி லூம்வேர்ல்டு விற்பனை நிலையம் ரூ. லட்சம் மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்படும்.

பாரம்பரிய வடிவமைகளுடன் தொன்மை மாறாமல் புதிய வடிவமைப்புகளை காஞ்சிபுரம் பட்டுப்புடவைளில் அறிமுகப்படுத்த, காஞ்சிபுரத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் வடிவமைப்பு மையம் நிறுவப்படும். பருத்தி மற்றும் பட்டு இரகங்களில் நவீன வடிவமைப்புகளை உருவாக்கும் நெசவாளர்களுக்கு முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பரிசாக முறையே ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருவதை முறையே ரூ.10,000, ரூ.6,000 மற்றும் ரூ.4,000 ஆக உயர்த்தி வழங்க முதலமைச்சர் ஆணைப்படி ரூ.8 லட்சம் நிதி வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் வெவ்வேறு விதமான அமைப்புகளுடைய துணிகளை நெய்வதற்கேற்ற மின்காந்த அசைவுடன் கூடிய கைத்தறி ரூ.5 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் உருவாக்கப்படும். கோ-ஆப்பெடக்ஸ் ரகங்களை மக்களிடையே நன்றாக விளம்பரப்படுத்த, 5 முக்கிய இடங்களில் ரூ.35 லட்சம் மதிப்பில் ஒளி உமிழும் இரு முறைய விளம்பரப் பலகைகள் நிறுவப்படும்.

கோ-ஆப்டெக்ஸின் 5 விற்பனை நிலையங்கள் ரூ.150 லட்சம் மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்படும்.வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் பெண்களுக்கான பட்டுலினன் சேலை ரகங்களும், ஆண்களுக்கான குர்த்தா ஆயத்த ரகங்களும் ரூ.15 லட்சம் மதிப்பில் அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவித்துள்ளார்.

மேலும் சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் சுந்தருக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலளித்து பேசியதாவது:- காஞ்சிபுரத்தில் பட்டு பூங்கா அமைப்பது தொடர்பான அனைத்து பணிகளும் முடிந்து விட்டது. மத்திய அரசும், மாநில அரசும் தனது பங்களிப்பை அளித்து விட்டது. பூஜ்ய நிலையில் கழிவு நீரை கொண்டு வரும் பணி மட்டும்தான் நடக்க வேண்டிவுள்ளது. பயனாளிகள் தங்களின் பங்களிப்பை செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.

அவர்களுக்கு வங்கிகள் கடன் உதவி அளிக்க முன்வந்துள்ளது. எனவே விரைவில் அங்கு பட்டு பூங்கா அமைக்கப்படும்.கைத்தறி நெசவாளர்களுக்கு 1955-ம் ஆண்டு முதல் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. நெசவு தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு கூலி உயர்வு அளிக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.