காஞ்சிபுரம், ஜூலை 14: காஞ்சிபுரத்தில் தற்போது சயன கோலத்தில் அருள்பாலித்து வரும் அத்திவரதரை தரிசிக்க விடுமுறை நாளான இன்று அலை, அலையாய் மக்கள் கூட்டம் வந்த வண்ணம் உள்ளது.
14-ம் நாளான இன்று, அத்திவரதர் பொன்வண்டு நிற பட்டாடை அணிவிக்கப்பட்டு, பல வகை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அத்திவரதரை தரிசிக்க இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. சுமார் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றதை காண முடிந்தது. விஐபி தரிசன பகுதியிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால், அங்கும் நீண்ட வரிசை காணப்பட்டது.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அதி அத்திவரதர் காட்சி கொடுப்பதால், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் என பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் தினந்தோறும் காஞ்சிபுரத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் காஞ்சியில் திரண்டதால், நகரமே திணறியது. நேற்று 2-வது சனிக்கிழமையாகவும், பெருமாளுக்கு உகந்த நாளாகவும், ஏகாதசி தினமாகவும் இருந்ததால் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு காணப்பட்டது.

இந்த அளவுக்கு கூட்டம் வரும் என கணிக்காத காரணத்தால். நேற்று அத்திவரதரை தரிசிக்க வந்த ஏராளமான பக்தர்கள் கடும் வெயில் காரணமாகவும், கூட்ட நெரிசலாலும் மூச்சு திணறி மயக்கமடைந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர். இதனால் ஏராளமான அத்திவரதரை தரிசிப்பதை கைவிட்டு திரும்பியதாக மக்கள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு நாளும் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் மக்களை கட்டுப்படுத்தும் அளவுக்கும், அவர்களை வேண்டிய வசதியை செய்து கொடுப்பதிலும் மாவட்ட நிர்வாகம் நேற்று திணறியதாக அவர்கள் குற்றம் சாட்டினர். குடிக்க தண்ணீர் கூட இல்லாமல், வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை கஷ்டப்பட நேர்ந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

விடுமுறை தினமான இன்றும் அதே அளவுக்கு பக்தர்கள் வருவார்கள் என்பதை எதிர்பார்த்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  திருக்கோவிலைச் சுற்றிலும் குடியிருப்பு பகுதிகளிலும் 10 சிறப்பு முகாம்கள், 104 இலவச மருத்துவ உதவி மையம், 108 அவசர கால ஊர்திகள் (6), இருசக்கர அவசரகால ஊர்தி (2) மற்றும் 24 மணிநேரமும் இயங்கும் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இம்முகாம்களில் அனைத்து வகையான அவசர சிகிச்சைகள் அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. குளோரின் கலந்த குடிநீர் வினியோகம் செய்வது, பக்தர்களுக்கு உணவு தயாரிக்கும் இடங்களிலும் தரமான உணவு தயாரிப்பது போன்றவற்றை அதிகாரிகள் உறுதி செய்து வருகின்றனர்.

கூட்டம் அதிகமானால் குறிப்பிட்ட நேரத்தை காட்டிலும் பக்தர்களை அனுமதிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.  இன்று மாவட்ட கலெக்டர் பொன்னையா, காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன், சப் கலெக்டர் சரவணன் ஆகியோர் ஏற்பாடுகளை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு உடனுக்குடன் உத்தரவுகளை பிறப்பித்தனர்.

நேற்று 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அத்திவரதரை தரிசித்த நிலையில், இன்றும் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இன்றும் இரண்டு லட்சத்தை பக்தர்கள் எண்ணிக்கை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.