ஸ்ரீஹரிகோட்டா, ஜூலை 14: நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட உள்ள சந்திரயான்-2 விண்கலத்துக்கான கவுண்டவுன் இன்று காலை 6.51 மணிக்கு தொடங்கியது. நாளை அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. சந்திரயான்-2 ஏவுவதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பார்வையிடவுள்ளார்.

நிலா குறித்த ஆய்வில் இந்தியாவும் ஈடுபடும் வகையில் கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஓராண்டு காலம் ஆய்வில் ஈடுபட்ட அந்த விண்கலம் தான் நிலவில் தண்ணீர் மூலக்கூறுகள் உள்ளன என்பதை முதன் முதலில் உலகிற்கு தெரிவித்தது.

இந்நிலையில் மீண்டும் நிலவில் ஆய்வு நடத்தவும், அதில் தரையிறங்கி, தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்யும் வகையில் மூன்று சாதனங்களைக் கொண்ட சந்திரயான்-2 திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
978 கோடி ரூபாய் செலவிலான இந்த திட்டத்தில் விண்கலங்களை விண்ணுக்கு சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மட்டுமே 338 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது தவிர நிலாவை சுற்றி வந்து ஆராயும் சந்திரயான் -2, நிலாவில் தரையிறங்கும் விக்ரம் கலம், விக்ரம் கலத்தில் இருந்து பிரிந்து நிலாவின் ஊர்ந்து சென்று ஆராயும் பிரக்யான் கலன் ஆகியவை 648 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளன.

4 டன் எடையைக் கூட சுமந்து செல்லும் திறன் கொண்ட மார்க் 3 ராக்கெட்டில் வைத்து நாளை அதிகாலை 2.51 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது. விண்ணில் ஏவப்பட்ட பின்னர் பூமியை 5 முறை ராக்கெட் சுற்றி வரும்.

இந்த பயணத்தின் போது, அதன் 6 பாகங்களும் ஒன்றன்பின் ஒன்றாக கழன்று கொள்ள. இறுதியாக உள்ள முனைபகுதியில் அமர்ந்திருக்கும் சந்திரயான் – 2 விண்கலம் நிலாவை நோக்கிய தனது பயணத்தை தொடங்கும்.

சந்திரயான்-2 ஏவுதல் நிகழ்வை, ஸ்ரீஹரிகோட்டாவில் நேரடியாக அருகில் இருந்து பார்ப்பதற்கு பொதுமக்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ராக்கெட் ஏவுதல் நிகழ்வை பார்ப்பதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் பிரத்யேகமாக அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, இஸ்ரோ இணையதளத்திலும் நேரலை ஒளிபரப்பும் செய்யப்படுகிறது.

இதற்கிடையே, சந்திரயான்-2 விண்கலத்துக்கான கவுண்டவுன் இன்று காலை 6.51-க்கு தொடங்கியது. இருபது மணி நேர கவுண்டவுன் முடிந்து நாளை அதிகாலை திட்டமிட்டபடி விண்ணில் சந்திரயான்-2 ஏவப்படும்.

இதனை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், ஆந்திரா கவர்னர் இ.எஸ்.எல்.நரசிம்மன், ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி உள்ளிட்டோரும் நேரில் பார்வையிடுகின்றனர். இதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதுவரை அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இதுபோன்று நிலவின் பரப்பில் ஆய்வுக் கலன்களை மெதுவாக தரையிறக்கும் முயற்சியை 38 முறை மேற்கொண்டுள்ளன.
அதில் பாதிக்கு பாதி என்ற அளவில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கின்றன.

அதிலும் அமெரிக்கா உள்பட மூன்று நாடுகள் மட்டுமே இதுவரை இந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளன. இப்போது, முதன்முறையாக மெதுவாக தரையிறக்கும் முயற்சியை இந்தியா மேற்கொள்ள உள்ள நிலையில், இத்திட்டத்தில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தால், உலக அளவில் நிலவின் தரையில் மெதுவாக ஆய்வுக் கலத்தை இறக்கிய நான்காவது நாடு என்ற பெருமையை பெறும்.