சரவணபவன் அதிபர் ராஜகோபால் கவலைக்கிடம்

சென்னை

சென்னை, ஜூலை 14: கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று ஸ்டான்லி மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவரும் சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலின் நிலை கவலைக்கு இடமாக உள்ளதாக கூறப்படுவதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில், சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, ராஜகோபால் மற்றும் ஓட்டல் மேலாளர் ஜனார்த்தனன் தவிர மற்றவர்கள் சரணடைந்தனர்.

உடல்நலனைக் கருத்தில் கொண்டு நீதிமன்றத்தில் சரண் அடைய கால அவகாசம் கோரி ராஜகோபால் மற்றும் ஜனார்த்தனன் தாக்கல் செய்த மனுக்களை, தள்ளுபடி செய்ததை அடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர்கள் இருவரும் சென்னை 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தானேந்திரன் முன் சரண் அடைந்தனர். அவர்கள் இருவரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இருவரது மருத்துவ சான்றுகளை பரிசிலீத்த பின்னர் ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள சிறைத்துறை வார்டில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர்.  ஸ்டான்லி சிறை வார்டின் சிகிச்சை பிரிவில் ராஜகோபாலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய், உள்ளிட்ட பலவேறு நோய்கள் இருப்பதாகவும் அவற்றுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் அவரது உடல் நிலை கவலைக்கு இடமானதாக கூறப்படுகிறது.

உடனடியாக ராஜகோபால், ஸ்டான்லி மருத்துவமனையின் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ராஜகோபாலின் உடல் நிலை குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் இன்று காலை ஸ்டான்லி மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் ராஜகோபாலுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த விவரங்களை கேட்டு தெரிந்துகொண்டதாக கூறப்படுகிறது.