நாயகன் ஹரி சங்கர். தாய் தந்தை இல்லாத இவர், சோடா தயாரித்து கடை கடையாக போடும் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியில் நாயகி மோனிகா தனது அம்மாவுடன் தள்ளுவண்டி டிபன் கடை நடத்தி வருகிறார். அந்த பகுதியில் இருக்கக்கூடிய கவுன்சிலர் முதற்கொண்டு நாயகியை தவறாக பார்ப்பதை அறியும் நாயகன், நாயகி வீட்டுக்கு சென்று பெண் கேட்கிறார். இதற்கு நாயகி மறுப்பு தெரிவிக்கிறார்.

இந்த சூழ்நிலையில் நாயகியின் தாயார் இறந்து விடுகிறார். தாய் இல்லாததால் மற்றவர்கள் தன்னை தவறாக பார்க்கிறார்கள் என்பதை உணரும் நாயகி, விரக்தியில் தற்கொலைக்கு முயல்கிறார். அப்போது அந்த வழியாக வரும் நாயகன் நாயகியை காப்பாற்றி, தன்னுடன் தங்க வைக்கிறார்.

நாயகனுக்கு உதவியாக சோடா கம்பெனியில் பணிபுரிகிறார் நாயகி. இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து வரும் நிலையில், நாயகனுக்கு அரசுப் பேருந்து மோதி இரண்டு கைகளையும் இழக்கிறார். நாயகனுக்கு ஏற்பட்ட விபத்திற்கு நஷ்டஈடு கேட்டு கோர்ட்டுக்கு செல்கிறார். அங்கு பல வாய்தாக்களுக்கு பிறகு நாயகனுக்கு 20 லட்ச ரூபாய் தர வேண்டும் என்று தீர்ப்பு வருகிறது.

ஆனால் அரசோ நாயகனுக்கு உரிய நஷ்டஈடு தராமல் இழுத்தடிக்கிறது. நாயகன் மீண்டும் கோர்ட்டுக்கு செல்கிறார், அங்கு அரசுப் பேருந்தை ஜப்தி செய்து நாயகனிடம் ஒப்படைக்கின்றனர். உரிய தொகையை அரசு வழங்கிய பிறகு பஸ்சை பத்திரமாக திருப்பித் தர வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இதையடுத்து, அந்த பேருந்தை நாயகன் எப்படி பாதுகாத்தார்? அரசு பேருந்தை பத்திரமாக ஒப்படைத்து இழப்பீடு வாங்கினாரா? நாயகனும் நாயகியும் திருமணம் செய்து கொண்டார்களா? என்பதே மீதி கதை.
நாயகன் ஹரி சங்கர் இரண்டு கைகளும் இல்லாமல் மிகவும் திறம்பட நடித்திருக்கிறார்.

நாம் படத்தில் பார்க்கும் பொழுது கதாபாத்திரம் மட்டுமே தெரிகிறது, நாயகி மோனிகா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார் இப்படத்தில் அவருக்கு நீண்ட வசனங்கள் இல்லை என்றாலும் பார்ப்பதற்கு அழகு பதுமையாக வருகிறார்.

அரசு பேருந்துக்களால் வாழ்வாதாரத்தை இழந்து தன் கை கால் இல்லாத நிலையிலும் கோர்ட்டுக்கு சென்று இன்று வரையிலும் சரியான நிவாரணம் கிடைக்காமல் வாழ்க்கையை தொலைத்து அவதிப்படுபவர்களின் ஆவணங்களை மிக அழகாக சுட்டிக்காட்டி இருக்கிறார் இயக்குனர் மகா சிவன். சகிஷ்னா இசையில் பாடல்கள் மனதில் பதியவில்லை.