திருவாரூர், ஜூலை 14: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட நீர் ஆதார பணிகளை மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் குழுவைச்சேர்ந்த கூடுதல் ஆணையர் ப்யூஸ் ஸ்ரீ வஸ்தவா ஆய்வு செய்தார்.

ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் வருண்குமார் என்ற விவசாயி வேளாண்மை பொறியியல்துறை மூலம் ரூ.1 லட்சம் மதிப்பில் பண்ணைக் குட்டை வெட்டப் பட்டுள்ளதை பார்வையிட்டு, பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து அணியமங்கலம் கிராமத்தில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் ரூ.15 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பாசன வாய்க்கால் தூர்வாரப் படுவதையும், இனாம்கிளியூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் ரூ.70 ஆயிரம் மதிப்பில் ஊராட்சி மரக்கன்று நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கு மரக்கன்றுகளை நட்டார். தென்னந்தோப்புகளில் அகழிவெட்டும் பணியையும் பார்வையிட்டார்.