சென்னை,ஜூலை 14: மயிலாடுத்துறையில் மருத்துவகல்லூரி அமைத்து தர வேண்டும் என அத்தொகுதி எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு மயிலாடுதுறை தொகுதி எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் பேசுகையில்: சீர்காழி, மயிலாடுதுறை மற்றும் பூம்புகார் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி, மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு, ஒரு புதிய மாவட்டம் ஒன்றை உருவாக்கித் தர வேண்டும்.

மயிலாடுதுறை தொகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, மயிலாடுதுறை நகராட்சிப் பகுதியில் ரூ.38.05 கோடி மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் புதிய பேருந்து நிலையம் அமைக்க கொள்கை ரீதியான அனுமதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தப்புள்ளி இதுவரை கோரப்படவில்லை. எனவே, இப்பேருந்து நிலையம் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மயிலாடுதுறை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க நிலம் கையப்படுத்தும் பணியை தொடங்கி விரைந்து முடிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நாகப்பட்டினம் மாவட்டத்தின் மையப்பகுதியான மயிலாடுதுறையில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன். மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு ஆ.சு.ஐ ஸ்கேன் இயந்திரம் அமைத்து தர வேண்டுமென கோருகிறேன்.மணல்மேடு பேரூராட்சியில் தீயணைப்பு நிலையம் அமைத்து தர வேண்டுகிறேன்.

திருமணஞ்சேரி அருள்மிகு உத்வாகநாத சுவாமி திருக்கோயிலை சுற்றுலா தலமாக மாற்றி, பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு ஏதுவாக, தங்கும் விடுதி அமைத்து தர வேண்டுகிறேன். நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களை இணைக்கும் மயிலாடுதுறை-முட்டம் பாலம் இணைப்புச் சாலையை நெடுஞ்சாலைத்துறையின் மூலம் அமைத்து தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.