சென்னை, ஜூலை 14: நீட் தேர்வில் ஏராளமானோர் அதிக மதிப்பெண்கள் பெற்றதன் காரணமாக மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கட்-ஆப் மதிப்பெண் 100 வரை உயர்ந்துள்ளது. இன்று வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி மற்றும் ஐஆர்டி மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. நாளை முதல் சுயநித¤ மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கான முதல் கட்ட கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்து விட்டது. மாநில தேர்வு கமிட்டியால் ஒரு வாரமாக நடத்தப்பட்டு வரும் இந்த கலந்தாய்வு மூலம் அரசு ஒதுக்கீட்டிற்கான 3968 இடங்களும் நிரம்பிவிட்டன.

பல் மருத்துவத்திற்கான இடங்களும் நிரம்பி இருக்கிறது. சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 908 இடங்கள் மட்டும் நிரப்பப்பட வேண்டும். நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுடன் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு நீட் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்து இருப்பதால் ஒவ்வொரு பிரிவிலும் கட்-ஆப் மதிப்பெண்கள் கணிசமாக உயர்ந்து இருக்கிறது. குறிப்பாக கடந்த ஆண்டு பொதுப் பிரிவு மாணவர்களுக்கு 430ஆக இருந்த கட்-ஆப் இந்த ஆண்டு 525ஆக உயர்ந்து உள்ளது.

அதேபோல் 2018-ல் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான கட்-ஆப் 375 ஆக இருந்தது. இந்த ஆண்டு இது 474 ஆக உயர்ந்து இருக்கிறது. இதேபோல் எம்பிசி, எஸ்பி, எஸ்இஏ போன்ற பிரிவுகளுக்கான கட்-ஆப் மதிப்பெண்களும் அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக எஸ்சி பிரிவினருக்கு கடந்த ஆண்டு 267ஆக இருந்த கட்-ஆப் இந்த ஆண்டு 364ஆக உயர்ந்து இருக்கிறது.

தமிழகத்தில் மொத்தம் 5400 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 3968 இடங்கள் வருகின்றன.