ஸ்ரீவில்லிபுத்தூர்-சென்னைக்கு குளிர்சாதன பேருந்து இயக்குக

சென்னை

சென்னை, ஜூலை 14: ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சென்னைக்கு குளிர்சாதன பேருந்து இயக்க வேண்டும் என அத்தொகுதி எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார். சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்எல்ஏ சந்திரபிரபா பேசுகையில்: ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்து தர வேண்டும்.

எனது தொகுதியில் நகராட்சி பகுதிகளில் குடிதண்ணீர் 20 நாட்களுக்கு ஒரு முறை தான் வழங்கப்பட்டு வருகிறது. ஆதலால் தாமிரபரணி தண்ணீர் கிடைப்பதற்கு கூடுதலாக புதிய திட்டம் அமைத்து குடிதண்ணீர் கிடைப்பதற்கு முதல்வரை கேட்டுக் கொள்கிறேன். அதே போன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அமைத்து தர வேண்டும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி, நகர் காவல் நிலையம் மிகவும் பழமையானது. இதற்கு புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பயணிகளின் வசதியாக ஸ்ரீவில்லிபுத்தூருந்து சென்னைக்கு குளிர்சாதன பேருந்து இயக்க வேண்டும்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் நகராட்சி ஆண்டாள் கோயிலுக்கு பாத்தியப்பட்ட திருபாற்கடல் தெப்பத்தை பராமரித்து தெப்பத்தை சுற்றி நடைபாதையுடன் பூங்கா அமைத்து தர வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூரில் தொழிற்பேட்டை அமைத்து தர வேண்டும். ஸ்ரீவில்லி புத்தூரில் நகரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பொதுமக்கள் சென்று வருவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. ஆதலால் பொதுப்பணிதுறை ஆய்வு மாளிகை அருகில் உள்ள இடத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுலகம் அமைத்து தர வேண்டும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பம்பை பேயனாறு அழகர் அணைத்திட்டத்தை நிறைவேற்றி விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் குடிநீர் பிரச்னைகளுக்கு முதல்வர் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.