சாலை விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாப பலி

சென்னை

மரக்காணம், ஜூலை 14: மரக்காணம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக பலியானார்கள். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- புதுவை வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அருண் குமார் (வயது 28). அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகன் மோகன் (25). இவர்கள் 2 பேரும் இன்று காலை புதுவையிலிருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு புறப்பட்டனர்.

மரக்காணம் அருகே ஆலப்பாக்கம் என்ற இடத்தில் வந்த போது அந்த வழியாக வந்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் திடீரென மோதியது.  இதனால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பனைமரத்தில் வேகமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த அருண்குமார், ஜெகன் மோகன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.  இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.