சென்னை, ஏப்.11:வருடந்தோறும் 3000 பேருக்கு நான் வேலை வாய்ப்பை உருவாக்கி தந்து இருக்கிறேன். ஆகவே இளைஞர்கள் என் பக்கம் இருக்கிறார்கள் பெண்கள் ஆதரவும் எனக்கு உள்ளது என்று தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் கூறினார்.

அதிமுகவின் தென் சென்னை வேட்பாளர் ஜெயவர்தன் இன்று சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் ஜாபர்கான் பேட்டை கங்கை அம்மன் கோவில் அருகில் 139, 172–வது வட்டத்தில் பிரசாரம் தொடங்கினார்.

சைதாப்பேட்டையில் ஜெயவர்தனை பெண்கள் உற்சாகத்துடன் மலர் தூவி வீதிகள் தோறும் பட்டாசுகள் வெடித்து ஜெயவர்தனேவுக்கு சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.அப்போது ஜெயவர்த்தன் நிருபர்களிடம் பேசியதாவது:–

குருநானக் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி அதன் மூலம் முன்னணி நிறுவனங்களில் வருடந்தோறும் 3000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தந்திருக்கிறேன். பள்ளிக்கரணை ஜெருசலேம் கல்லூரியில் கல்வித்திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் சார்பில் 85 விதமான வேலைவாய்ப்பு பயிற்சிகளை அளித்து ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுத் தந்திருக்கிறேன்.

தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்க வேண்டும் என்ற அம்மாவின் கனவை நனவாக்கும் வகையில், தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு எம்.பி.யாக நான் எடுத்த முயற்சியின் காரணமாக ரூ. 15 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 18 தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, அவற்றில் ஐ.டி. துறை உட்பட ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தந்திருக்கிறேன் என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.