ஸ்ரீஹரிகோட்டா, ஜூலை 15: நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இன்று விண்ணில் ஏவப்பட இருந்த சந்திரயான்-2 விண்கலம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-1 என்ற விண்கலத்தை கடந்த 2008-ம் ஆண்டு அனுப்பியது. நிலவில் தண்ணீருக்கான மூலக்கூறுகள் இல்லை என்று அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் முடிவுகட்டியிருந்த நிலையில், தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை சந்திரயான்-1 உறுதி செய்தது.

அதைத்தொடர்ந்து, சந்திரனின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கி உள்ளது. சந்திரனை சுற்றி வந்து ஆய்வு செய்வதற்காக ‘ஆர்பிட்டர்‘ என்ற சாதனம், சந்திரனில் தரை இறங்கி ஆய்வு செய்ய ‘லேண்டர்‘ என்ற சாதனம், அங்கு தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்ய ‘ரோவர்‘ என்ற சாதனம் என மொத்தம் 3 சாதனங்கள் சந்திரயான்-2 விண்கலத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்த மூன்று சாதனங்களிலும் அதிநவீன கேமராக்கள், எக்ஸ்ரே கருவிகள், வெப்ப நிலையை ஆய்வு செய்யும் கருவிகள், லேசர் தொழில்நுட்பத்தில் செயல்படும் கருவிகள் என 13 வகையான கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மிகவும் கனமான ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 15-7-2018 அன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்த நேரம் நிர்ணயிக்கப்பட்டது. அதற்கான 20 மணி நேர கவுண்ட் டவுண் நேற்று காலை 6.51 மணிக்கு தொடங்கியது.

நிலவை அடைவதற்கான கால அவகாசமும் 52 நாட்களிலிருந்து 54 நாட்களாக அதிகரிக்கப்பட்டது. இன்று அதிகாலை சரியாக 2.51 மணிக்கு சந்திராயன் விண்ணில் பாயும் என அறிவிக்கப்பட்ட நிலையில், விண்கலத்தை ஏவ 56 நிமிடங்கள் 24 நொடிகள் இருக்கும்போது தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து கவுண்ட்டவுன் உடனடியாக நிறுத்தப்பட்டது. சந்திரயான்-2 ஏவுவது குறித்த அடுத்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.