புதுடெல்லி / சென்னை, ஜூலை 15: பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாக டெல்லியில் 14 பேரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்து உள்ளனர்.
இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, அந்நாட்டு உளவுத்துறை தகவலின் அடிப்படையில் விசாரணை செய்து வரும் என்ஐஏ அதிகாரிகள் மண்ணடி லிங்கி செட்டி தெருவில் உள்ள இஸ்லாமிக் ஹிண்ட் என்ற அமைப்பின் அலுவலகத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையில் இந்த இயக்கத்தைச் சேர்ந்த சிலர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதேபோல் நாகப்பட்டினத்தில் மஞ்சகொல்லை, சிக்கல் ஆகிய இடங்களில் அசன் அலி, ஹாரீஸ் முகமது ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. அங்கு நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் அடங்கிய மடிக்கணினி, பென்டிரைவ் மற்றும் செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து ஹாரிஷ் முகமது, ஹசன் அலி இருவரையும் பிடித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கொண்டு சென்ற என்ஐஏ அதிகாரிகள், விசாரணைக்குப் பின் இருவரையும் கைது செய்தனர். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அவர்களை சென்னைக்கு கொண்டு வந்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற மாஜிஸ்திரேட் செந்தூரபாண்டியன் இல்லத்தில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்கள் இருவர் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி 25-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சோதனையின் அடிப்படையில் கிடைத்த தகவல் படி தேசிய புலனாய்வு அமைப்பினர் டெல்லியில் 14 பேரை கைது செய்தனர். அன்சருல்லா பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக கூறப்படுகிறது. இவர்கள் 14 பேரும் இன்று விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.