தபால்துறை தேர்வில் தமிழ்மொழி இடம்பெற வலியுறுத்தப்படும் மத்தியில் குரல் கொடுப்போம்

சென்னை

சென்னை, ஜூலை 15: தமிழ் மொழி மீதான பற்று விஷயத்தில் எதிர்க்கட்சிக்கு உள்ளது போல 100 மடங்கு உணர்வு அதிமுகவுக்கு உள்ளதாக முதலமைச்சர¢ எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். சட்டசபையில் அஞ்சலகத்தேர்வில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டது தொடர்பாக கொண்டு வரப்பட்ட கவனஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் கூறியதாவது:- துணை முதலமைச்சர் தெளிவாக சொன்னார்கள், மீன்வளத் துறை அமைச்சரும் தெளிவாக சொன்னார். இந்த உத்தரவை போட்டது மத்திய அரசாங்கம். மத்திய அரசாங்கத்திலே வாதாடக் கூடிய ஒரு வாய்ப்பை நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் தந்திருக்கின்றார்கள்.

அங்கே வாதாடுவதிலே என்ன தவறு என்று உங்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன். அதுமட்டுமல்ல, அங்கே அந்தப் பிரச்சனையை எழுப்புகின்ற போது தான், என்ன பதில் கிடைக்கும் என்பது நமக்கு தெளிவாக தெரியும். ஆகவே, தெளிவாக தெரிந்த பிறகு ஒரு முடிவு எடுத்தால் அது சரியாக இருக்கும். அந்த அடிப்படையிலே தான், நம்முடைய துணை முதலமைச்சர் அந்த கருத்தை தெரிவித்தார். நீங்கள் ஒரு முடிவோடு வந்திருக்கிறீர்கள். எப்படியாவது இந்த அவையிலிருந்து வெளிநடப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலே இருந்தால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

எங்களை பொறுத்தவரைக்கும், உங்களுக்கு என்ன உணர்வு இருக்கின்றதோ, அதே உணர்வு எங்களிடத்தும் இருக்கின்றது. ஆகவே, அந்த உணர்வின் அடிப்படையிலே, நீங்கள் ஒரு காலத்திலே சொன்னீர்கள், 37 பேர் இருந்து என்ன சாதித்தீர்கள் என்று எங்களை கேட்டீர்கள். மத்தியிலே பிரச்சனை வருகின்றபோது, அதிமுகவிலிருந்து 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திலே இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டீர்களே என்ன சாதனை செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பினீர்களே, அதே கேள்வியைத் தான் நாங்களும் எழுப்புகின்றோம். நீங்கள் 37 பேர் வெற்றி பெற்று மக்கள் உங்களை அனுப்பி இருக்கிறார்கள்.

எதற்காக? மத்தியிலே ஒரு பிரச்சனை வருகின்றபோது, அந்த பிரச்சனையை நாடாளுமன்றத்திலே எழுப்பி அதை தீர்வு காண்பதற்கு தான் மக்கள் உங்களை தேர்ந்தெடுத்து அனுப்பி இருக்கிறார்கள். ஆகவே, அங்கே குரல் கொடுக்கின்றபோது, நீங்களும் குரல் கொடுங்கள், நாங்களும் குரல் கொடுக்கின்றோம். அப்பொழுது என்ன பதில் வருகின்றது என்பதை தெரிந்து, அதற்கு ஏற்றவாறு நாம் நம்முடைய அவையிலே ஒரு நல்ல முடிவை எடுக்கலாம் என்பதை தான் துணை முதலமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.

அதில் என்ன வேறுபாடு இருக்கிறது? ஆகவே, நீங்கள் பொறுக்க மாட்டீர்களா?  இன்றைக்கு தமிழிலே தேர்வு எழுதுகின்ற ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையிலே, நம்முடைய தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மத்தியிலே இருக்கின்ற காரணத்தினாலே, மத்தியிலே இருக்கின்ற அரசு தான் இந்த உத்தரவை போட்டு இருக்கின்றது. ஆகவே, இந்த உத்தரவை நாம் ரத்து செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலே அங்கே குரல் கொடுத்தால் தான் இதற்கு தீர்வு காணப்படும். அந்த அடிப்படையில தான் நான் சொன்னேன்.

ஆகவே, இவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த செய்தியை சொல்லி வெளிநடப்பு செய்திருக்கின்றார்கள். எங்களை பொறுத்தவரைக்கும், அவர்களுக்கு என்ன உணர்வு இருக்கின்றதோ, அதேபோல 100 மடங்கு உணர்வு எங்கள் பகுதியிலே இருக்கின்றது. ஆகவே, தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற விதத்திலே நாடாளுமன்றத்திலே, எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்புவார்கள்.

இரு அவைகளிலும் குரல் எழுப்புவார்கள் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து, இதற்கு ஒரு முடிவு கட்டுகின்ற வரை எங்களுடைய அரசு தொடர்ந்து போராடும் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.