லார்ட்ஸ், ஜூலை 15:  உலகக்கோப்பை வரலாற்றில் கேப்டன் பொறுப்பில் இருந்துகொண்டு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன்.

இந்த உலகக்கோப்பை சீசனில் புதிய உத்வேகத்துடன் களமிறங்கிய நியூசிலாந்திற்கு அணிக்கு, அந்நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாது, பிற நாட்டு ரசிகர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதற்கு முழுமுதற்காரணம் அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன். தனி ஒருவனாக நின்று அணியை இறுதிப்போட்டி வரை வழிநடத்தியதுமட்டும் அல்லாது நடப்பு தொடரின் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேன் வில்லியம்சன்தான், 10 இன்னிங்ஸில் பங்கேற்று மொத்தம் 578 ரன்கள் குவித்திருந்தார். இதன்மூலம், உலகக்கோப்பை தொடர்களில் கேப்டன் பொறுப்பில் இருந்துகொண்டு அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்ததுடன், 12 ஆண்டுகால சாதனையை வில்லியம்சன் முறியடித்துள்ளார்.
அத்துடன், உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதும் வில்லியம்சனுக்கு வழங்கப்பட்டது.

இது குறித்து அவர் கூறுகையில், போட்டி கடும் சவாலாக இருந்தது. இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். உலகக் கோப்பையை வெல்ல அந்த அணி தகுதியானது. எங்கள் அணி வீரர்களும் கடைசிவரை போராடினார்கள். அவர்களுக்கு நன்றி. கடைசிக் கட்டத்தில் ஸ்டம்பை நோக்கி எறியப்பட்ட பந்து, பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரி சென்றதுதான் அவமானகரமானது. (இதுதான் ஆட்டத்தை போக்கை மாற்றியது) விளையாட்டில் இதுவும் ஓர் அங்கம் என்றாலும் இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்கக் கூடாது என்று நினைக்கிறேன், என்றார்.