சென்னை, ஜூலை 15: சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பெற்றோருடன் படுத்துறங்கிக்கொண்டிருந்த 3 வயது குழந்தையை மர்மநபர் ஒருவர் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஒடிசாவை சேர்ந்தவர் ராம்சிங். இவர், சென்னையில் தங்கி வேலை செய்துவருகிறார். நேற்றிரவு சொந்த ஊருக்கு செல்வதற்காக குடும்பத்துடன் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வந்துள்ளார். முன்கூட்டியே ரெயில் நிலையத்திற்கு வந்துவிட்டதால், ரெயில் வரும் வரை ஓய்வெடுக்காமல் என்று முடிவுசெய்து, ரெயில் நிலையத்திலேயே தூங்கிக்கொண்டிருந்துள்ளனர். இரவு 11.30 மணியளவில் திடீரென விழிப்பு வந்து பார்க்கும்போது, அருகில் படுத்திருந்த குழந்தை சோமநாத்தை (வயது 3) காணவில்லை.

அதிர்ந்துபோன ராம்சிங், உடனடியாக அங்கிருந்த சென்ட்ரல் ரெயில்வே போலீசிடம் புகார் அளித்துள்ளார். இன்ஸ்பெக்டர் தாமஸ் தலைமையிலான போலீசார் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்யும்போது, கேட் எண் 6 அருகே நீல கலர் சட்டை அணிந்த நபர், குழந்தையை எடுத்துச்சென்றது தெரியவந்தது. இதனடிப்படையில், குழந்தையை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.