விழுப்புரம், ஜூலை.15: விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியம் கரியாலூரில் நேற்று நடைபெற்ற கோடை விழா நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். விழா நிகழ்ச்சியில் முதல் மூன்று துறைகளுக்கும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் கலைநிகழ்ச்சிகளில் பங்குபெற்றவர்களுக்கும் பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.

கல்வராயன்மலை கோடை விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோடை விழா மிகச் சிறப்பாக அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து, 30 துறைகளின் மூலம் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்கும் வகையில் கண்காட்சிகள் அமைக்கப் பட்டிருந்தது.
இதில் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்ட அரங்குகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

முதல் பரிசு தோட்டக் கலைத்துறைக்கும்,இரண்டாம் பரிசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள் துறைக்கும், மூன்றாம் பரிசு வேளாண்மைத்துறைக்கும், சிறப்பு பரிசுகளாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறைக்கும், வனத்துறைக்கும், சிறந்த கலைநிகழ்ச்சிகளுக்கு பரிசுகளையும், போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளையும் கலெக்டர் வழங்கினார். விழாவில் மாவட்ட கலெக்டர் விழாப் பேருரையாற்றினார்.