தமிழக எம்பிக்கள் அமளி எதிரொலி அஞ்சல் துறை தேர்வு ரத்து

TOP-1 இந்தியா

புதுடெல்லி, ஜூலை 16:  மாநிலங்களவையில் தமிழக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அஞ்சல் துறை தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை மாநிலங்களவையில் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். எல்லா மொழிகளிலும் தேர்வு நடத்தப்படும் என அவர் கூறினார்.

அஞ்சல் துறைக்கான எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்வை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டதையடுத்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த பிரச்சினை மாநிலங்களவையில் எதிரொலித்தது.

தமிழகத்தைச் சேர்ந்த திமுக., அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு மீண்டும் அவை கூடியபோது இந்த பிரச்சினையை அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட் எம்பிக்கள் ¢எழுப்பினர். இதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அஞ்சல் துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார். எல்லா மொழிகளிலும் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். இதற்கு உறுப்பினர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.