சென்னை, ஜூலை 16: சென்னை நந்தனம் அருகே இன்று காலை சென்றுக்கொண்டிருந்த பைக் மீது, பின்னால் வந்த மாநகர பேருந்து மோதிய விபத்தில், ஆந்திராவை சேர்ந்த இளம்பெண்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

அண்ணாசாலையில் இருந்து எழும்பூர் நோக்கி பைக் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. இதில், 2 இளம்பெண்கள் உட்பட 3 பேர் பயணித்தனர்.
நந்தனம் அருகே வந்தபோது, பின்னால் வந்த மேற்கு தாம்பரத்திலிருந்து பிராட்வே நோக்கி செல்லக்கூடிய தடம் எண் ஏ51 மாநகரப் பேருந்து, பைக் மீது மோதியுள்ளது.
இதில், பைக்கில் இருந்த கீழே விழுந்து இரண்டு பெண்களும் பேருந்து சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

தகவலறிந்துவந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். படுகாயமடைந்த மற்றொருவரை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து, இது குறித்து விசாரணை நடத்தினர்.
விபத்தில் சிக்கிய மூவரும் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்தவர்கள் என்பதும், உயிரிழந்தவர்கள் லட்சுமி (வயது 21), பவானி (வயது 20) என்பதும், படுகாயமடைந்தவர் சிவா (வயது 20) என்பதும் தெரியவந்தது.

இவர்கள் மூவரும் வேளச்சேரியில் தங்கி எழும்பூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துவந்துள்ளனர். இன்று காலை வழக்கம்போல், பணிக்கு சென்றுக்கொண்டிருந்த போதுதான் விபத்து நேரிட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவர் குணசேகரனை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
அலுவலக நேரத்தில் நடந்த இந்த விபத்தால், அப்பகுதியில் சிறிதுநேரம் பதற்றம் நிலவியதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.