லண்டன், ஜூலை 16:  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர், பிரிட்டன் பிரதமர் தெரசா மேயை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து, சொந்த மண்ணில் நடந்த உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டதுடன், இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மல்லுக்கட்டி முதன்முறையாக கோப்பையை வென்றது. இதனை அந்நாட்டு வீரர்கள், ரசிகர்கள் மட்டும் அல்லாது, ஒட்டுமொத்த இங்கிலாந்து மக்களும் கொண்டாடிவருகின்றனர்.

இந்த கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாக, இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர், தலைநகர் லண்டனில் பிரதமர் தெரசா மேயை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பின்போது, போட்டியில் வென்ற உலக கோப்பையை கேப்டன் இயன் மோர்கன் கையில் ஏந்தியவாறு போஸ் கொடுக்க, அதனின் மறுபுறம் பிரதமர் தெரசா மேவும் கோப்பையை தாங்கி பிடித்து உற்சாகத்தை வெளிப்படுத்தியவாறு குழு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர்.

பரபரப்புக்கு சற்றும் இடைவெளி விடாமல் நடந்துமுடிந்த உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் மோதின. ‘டை’ ஆன இந்தப் போட்டியில், சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரும் டை ஆனதால், புதுவிதியாக அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.