மும்பை, ஜூலை 16:  எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் வரும் 19-ம் தேதி அறிவிக்கப்படுவர் என்றும், அதில், கேப்டன் விராட் கோலி மற்றும் பவுலர் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 3-ம் தேதி வரை போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுக்கான தேர்வு வரும் 19-ம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தேர்வு குழு, அணியை தேர்வு செய்து அறிவிக்கும். இந்த தொடரில் இருந்து கேப்டன் விராட் கோலி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தெரிகிறது. குறிப்பாக, ஒருநாள் மற்றும் டி-20 தொடரில் ஓய்வளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அவ்வாறு விராட்டுக்கு ஓய்வளிக்கப்படும் பட்சத்தில், ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்தி செல்வார்.

பெருவிரல் காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகிய ஷிகர் தவான், காயத்திலிருந்து மீண்டுவிட்டாரா? இந்த தொடரில் பங்கேற்பாரா? என்பது தெரியவில்லை. அதேபோல், தோனிக்கும் வாய்ப்பளிக்கப்படுமா? என்பது சந்தேகமே. மறுபுறம், இந்திய ஏ அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து அதிகாரபூர்வமற்ற ஒரு நாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில், சிறப்பாக விளையா டும் வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் எனக் கூறப்படுவதால், இந்த தொடருக்கான இந்திய அணியில் புதுமுக இளம் வீரர்களை எதிர்பார்க்கலாம்.