டெல்லி, ஜூலை 16:  குடும்ப கஷ்டம் கையை கட்டிப்போட்டதன் விளைவாக, நேரு பல்கலையில் காவலராக வேலை பார்த்துவந்த ராஜஸ்தான் வாலிபர், படிப்பின் மீதுள்ள தீராத நாட்டத்தால் விடாமுயற்சியுடன் செயல்பட்டு தற்போது அப்பல்லைகயிலேயே மாணவராக சேர்ந்து படிக்கவுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் பஜேரா கிராமப் பகுதியைச் சேர்ந்தவர் ராம்ஜல் மீனா ( வயது 34). பள்ளிப்படிப்பை தனது கிராமத்திலேயே முடித்தார். அதன்பிறகு குடும்ப வறுமையின் காரணமாக படிக்க முடியாமல் போனது. ராம்ஜல் கடந்த 2014-ம் ஆண்டு டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் செக்யூரிட்டி பணியில் சேர்ந்தார். ஆனால், அதன்பிறகும் படிப்பின் மீதான நாட்டம் ராம்ஜலுக்கு தணியவில்லை.

இதனையடுத்து, பல்கலையின் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் உதவியோடு பணி நேரம் போக மீதி நேரத்தில் நேரு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு தயாரான ராம்ஜல், தற்போது அந்த தேர்வில் தேர்ச்சியும் பெற்று அசத்தியுள்ளார். இந்த நிலையில், அதே பல்கலையிலேயே பி.ஏ ரஷ்ய பாடப்பிரிவு தேர்வு செய்து ராம்ஜல் படிக்க உள்ளார். ராம்ஜலுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில், இவர் மட்டுமே சம்பாதித்துவருவதால், காலையில் மாணவராக கல்வி கற்பதற்கும், இரவில் காவலர் வேலையை தொடர்வதற்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் ராஜ்மல் அனுமதிக் கேட்டுள்ளாராம்.