சென்னை, ஜூலை 17: நீட் தேர்வு விவகாரத்தில் தேவைப் பட்டால், சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டத் தயார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
நீட் மசோதாக்கள் திருப்பி அனுப்பியது தொடர்பாக கடைசியாக எழுதப்படும் நினைவூட்டல் கடிதத்திற்கும் மத்திய அரசு பதில் அளிக்கவில்லையென்றால், நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரம் முடிந்த பின்பு எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு மசோதாக்கள் திருப்பி அனுப்பியது தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். அதில் நீட் மசோதாக்கள் இரண்டையும் 2017 ம் ஆண்டே திருப்பி அனுப்பியதாக மத்தியஅரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்ததை சுட்டிக்காட்டினார். மசோதாக்கள் திருப்பி அனுப்பபட்டு 2 ஆண்டுகளாக சட்டப்பேரவையில் தெரிவிக்கவில்லை.

மசோதாகள் திருப்பி அனுப்பிய 6 மாதத்திற்குள் சட்டப்பேரவையில் புதிய நீட் மசோதா நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருக்க சட்ட விதியுள்ளது என்பதையும் ஸ்டாலின் தெரிவித்தார்.
அதையும் அரசு செய்யாமல் 7 கோடி மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார். அதே போல மாணவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த கூட்டத்தொடரிலே பேரவையில் மசோதாக்கள் நிறைவேற்ற வேணடும் என்றும் வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மசோதாக்களை மத்திய அரசு திருப்பி அனுப்பிய பின்பு 12 நினைவூட்டல் கடிதங்களை தமிழக அரசு எழுதியுள்ளது. இதற்கு இது வரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை. ஆனால் நீதிமன்றத்தில் தான் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டாக தெரிவித்துள்ளார்கள். என்ன காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டது என்பதையும் தெரிவித்தால் தான் புதிய மசோதா பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கமுடியும் என்றார்.

இதற்கு கடைசியாக ஒரு நினைவூட்டல் கடிதம் எழுதவுள்ளோம். அதற்கும் பதில் அளிக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அப்போது குறிக்கிட்டு பேசிய ஸ்டாலின், இதுவரை எழுதிய கடிதத்திற்கு பதில் அளிக்காத போது இனி எழுத போகும் கடித்திற்கும் பதில் வரைவில்லை என்றால் என்ன செய்வது என்று கேட்டார்.எனவே எஞ்சியுள்ள மூன்று நாளில் பேரவையில் புதிய மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதறக்கான காரணம் தெரிந்தால் தான் , ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் மசோதா நிறேவேற்றி அனுப்ப வசதியாக இருக்கும். எனவே நினைவூட்டல் கடிதம் எழுதி பதில் வரவில்லை என்றால் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டவும் அரசு தயாராக உள்ளதாக தெரிவித்தார்.