புதுடெல்லி, ஜூலை 17: அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்குமாறு கர்நாடக சட்டசபை சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதே சமயம், சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்எல்ஏக்கள் கலந்துகொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்கப் போவதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளதால் குமாரசாமி அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாக்களை சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமார் ஏற்காததால் காலதாமதம் ஏற்பட்டது.

தங்களது ராஜினாமாக்களை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிடுமாறு 15 அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் எம்எல்ஏக்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, சபாநாயகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, முதலமைச்சர் குமாரசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் அனில் தவான் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.

இந்த அனைத்து வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்படுமென அறிவித்தது. அதன்படி உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

அந்த தீர்ப்பில், எம்எல்ஏக்களின் ராஜினாமா விவகாரத்தில் முடிவெடுக்க சபாநாயகருக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்குமாறு அவருக்கு உத்தரவிட முடியாது. அதேபோல ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகருக்கு கால அவகாசம் எதையும் வழங்க முடியாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.

அதேபோல, நாளை கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பது எம்எல்ஏக்களின் விருப்பம். வாக்கெடுப்பில் பங்கேற்க அவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

கர்நாடக சட்டப் பேரவையில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – மஜத கூட்டணி அரசு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளவிருக்கும் சூழலில், அதிருப்தி எம்எல்ஏக்கள் அதில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளனர். இதனால் குமாரசாமி அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.