பெங்களூரு, ஜூலை 17: கர்நாடகாவின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வெளியான கணிப்பை அடுத்து கபினி மற்றும் கிருஷ்ண ராஜ சாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 855 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் போதிய மழை இன்றி தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், டெல்டா மாவட்டங்களில் விவசாய பணிகளுக்காக காவிரி ஆற்றில் இருந்து நீர் திறக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிடப்பட்டது. அதன்படி ஜூலை மாதத்திற்கு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை மழைப் பொழிவின் அடிப்படையில் திறந்து விடுமாறு தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காவிரியில் நீர் திறக்குமாறு கர்நாடகா முதல்வர் குமாரசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் அடுத்த 5 நாட்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறி இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி நீரும், கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 355 கனஅடி நீரும் என மொத்தமாக வினாடிக்கு 855 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மழைப்பொழிவு அதிகரிக்கும் பட்சத்தில் திறந்துவிடப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.