சென்னை, ஜூலை 17: உள்ளாட்சி தேர்தல் பற்றிய அறிவிப்பு அக்டோபரில் வெளியிடப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

சட்டசபையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.
எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் விவாதத்தல் கலந்துகொண்டு பேசுகையில் கூறியதாவது:-
நேற்று நாடாளுமன்றத்தில் எங்கள் எம்.பி. ஆ,ராசா பேசியதற்கு, ஊரக வளர்ச்சி துறை மத்திய அமைச்சர் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் 2016-17ம் ஆண்டு செயலாக்க நிதி வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

2016-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் 5 ஆண்டு பதவி காலம் முடிந்தும் இன்னும் தேர்தல் நடத்தாமல் தமிழக அரசு தாமதப்படுத்தி வருகிறது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளில் பணிகள் தேங்கி உள்ளது என்றார். இதே கருத்தை வலியுறுத்தி காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராமசாமியும் பேசினார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:-  72 ஆண்டுகளுக்கு முன்பு வார்டு வரையறை செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த மிகப்பெரிய பணியை முடித்துள்ளோம். மேலும் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் நேற்று வழக்கு வந்த போதும் தெரிவித்துள்ளோம்.

ஆகவே தேர்தல் நடத்த அரசு தயாராக உள்ளது. 2017- 18, 2018-19 ஆகிய ஆண்டுகளுக்கு வர வேண்டிய நிதியில் 8531 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. மேலும் முதல்வரும், நானும் பல முறை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர், நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர்களை தனிதனியே சந்தித்து தொடர்ந்து வலியுறுத்தி மீதமுள்ள நிதியை பெற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். மேலும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பணிகள் உள்ளாட்சித் துறையின் கீழ் செய்யப்பட்டுள்ளன. ஆகவே எந்த வித தொய்வுமின்றி பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அக்டோபரில் அறிவிப்பு இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தல் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த போது, மாநிலத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் வரும் அக்டோபர் மாதம் வரை அவகாசம் கோரப்பட்டது. வார்டு வரையறைப் பணிகள் இன்னும் முடிவடையாததால், இந்த அவகாசம் தேவை என ஆணையத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்து வரும் அக்டோபர் மாதம் அறிவிக்கப்படும் எனறு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இதுகுறித்த வழக்கை முடித்து வைத்தது.