லக்னோ, ஜூலை 17: மூன்று இடத்துக்கு அலைக்கழிக்கப்பட்டதால் குறைவான எரிபொருளுடன் விமானம் ஒன்று லக்னோவில் பத்திரமாக தரையிறங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் இருந்து டெல்லிக்கு விஸ்தாரா என்ற தனியார் நிறுவன விமானம் 153 பயணிகளுடன் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

டெல்லியில் மோசமான வானிலை எனக்கூறி லக்னோவிற்கு விமானம் திருப்பி விடப்பட்டது. ஆனால், லக்னோவிலும் தெளிவான வானிலை இல்லை எனக்கூறி கான்பூர் அல்லது பிரக்யாராஜ்ஜில் தரையிறக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

விமானம் கான்பூருக்கு சென்றுகொண்டிருந்த நிலையில், லக்னோவில் வானிலை தெளிவானதாக கூறி, அங்கு தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது விமானத்தில் 10 நிமிடங்களுக்கு மட்டுமே பறக்கும் அளவுக்கு எரிபொருள் இருந்தது. இதை ஏடிசி அதிகாரிகளிடம் விமானி விளக்கிய போது உடனடியாக லக்னோவில் இறங்க அனுமதிக்கப்பட்டது. இதனை அடுத்து விமானம் பத்திரமாக தரையிறங்கியது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.