மும்பை, ஜூலை 17:  இந்திய அணியின் பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரி நியமிக்கப்படக் கூடாது என்று பெயர் குறிப்பிடப்படாத முக்கிய புள்ளிகள் சிலர் போர்க்கொடி உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணியின் பயிற்சியாளர்களின் பதவிக்காலம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்கலாம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் (ஆக.3-செப்.3) இவர்களின் பதவிக்காலம் முடிகிறது. இந்த நிலையில், புதிய தலைமை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், பந்துவீச்சு பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர், பிசியோ தெரபிஸ்ட், வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் மற்றும் நிர்வாக மேலாளர் உள்ளிட்ட பணி யாளர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை பிசிசிஐ கோரியுள்ளது.

தற்போது பணியில் உள்ள ரவி சாஸ்திரி மற்றும் அவரது உதவியாளர்கள் தேர்வு நடைமுறையில் நேரடியாக கலந்து கொள்ளலாம் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. தற்போது 57 வயதாகும் ரவிசாஸ்திரி, மீண்டும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதற்கு, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட குறிப்பாக மும்பையை சேர்ந்த முக்கிய புள்ளிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணிக்கு வேறு ஒரு நல்ல பயிற்சியாளர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் பிசிசிஐ-யிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனராம்.

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியுடன் வெளியேறியதை தொடர்ந்து, டிரெய்னர் சங்கர் பாசு, பிஸியோ பாட்ரிக் பர்ஹக் ஆகியோர் தங்களது பதவியில் இருந்து விலகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.