மும்பை, ஜூலை 17:  இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்கலாம் முடிவடையும் நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை (ஆக.3-செப்.3) இவர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதிய தலைமை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், பந்துவீச்சு பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர், பிசியோ தெரபிஸ்ட், வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் மற்றும் நிர்வாக மேலாளர் உள்ளிட்ட பணியாளர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை பிசிசிஐ கோரியுள்ளது.

விண்ணப்ப விவரம், தகுதிகள்?
தலைமை பயிற்சியாளர் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கான விண்ணப்ப காலக்கெடு வரும் 30-ம் தேதி மாலை 5 மணிவரை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை பயிற்சியாளர் பதவிகளுக்கு 3 தகுதிகளை மட்டுமே பிசிசிஐ நிர்ணயித்துள்ளது. அதன்படி, தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர் டெஸ்ட் போட்டி விளையாடும் அணிக்கு குறைந்தது 2 ஆண்டுகள் பயிற்சி அளித்திருக்க வேண்டும் அல்லது ஐசிசி-யின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த அணியில் 3 வருடங்கள் பணியாற்றியிருக்க வேண்டும். இது ஏ அணியாகவும், ஐபிஎல் அணி யாகவும் இருக்கலாம். மேலும் விண்ணப்பதாரர் 30 டெஸ்ட் போட்டி அல்லது 50 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியிருக்க வேண்டும்.

இதே தகுதிகள்தான் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் பயிற்சியாளர் பதவிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், போட்டியின் எண்ணிக்கை மாறுபட்டுள்ளது. இந்த 3 பணிகளுக்கும் விண்ணப்பிப்பவர்கள் 10 டெஸ்ட் அல்லது 25 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். 60 வயதுக்கு குறைந்தவர்களாக இருப்பதும் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.