8 ஆண்டுகளில் 360 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

சென்னை

8 ஆண்டுகளில் 360 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் 122.45 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது மயிலாடுதுறை தொகுதி எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் பேசுகையில்: எனது தொகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.

மேலும் திருச்சிற்றம்பலம், நமச்சிவயபுரம், அகத்திஸர்புரம் உள்ளிட்ட 5 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்டி தர வேண்டும். மயிலாடுதுறை தொகுதியில் அதிக அளவு நெல் சாகுபடி ஆகும் பகுதி, 1.5 லட்சம் மெட்ரிக் டன் சேமிப்பு கிடங்கு மயிலாடுதுறை கும்பகோணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகவே எனது தொகுதியிலேயே சேமிப்பு கிடங்கு அமைத்து தர வேண்டும்.

அமைச்சர் காமராஜ்: மயிலாடுதுறை தொகுதியில் 8 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையத்திற்கு சொந்த கட்டிடம் தரப்பட்டுள்ளது. தேவைப்படுகிற இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவும் தயாராக உள்ளேம். உறுப்பினர் குறிப்பிட்ட 5 இடங்களில் 40 செண்ட் இடம் கிடைக்கும் பட்சத்தில் அந்த இடங்களில் சொந்த கட்டிடம் கட்டி தரப்படும்.

மேலும் மயிலாடுதுறையில் சேமிப்பு கிடங்கு வேண்டும் என உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். அங்கு எதிர்காலத்தில் அமைப்பது தொடர்பாக பரீசிலிக்கும், கடந்த 8 ஆண்டுகளில் 360 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 122.45 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 45 உலர்களங்கள் 38.92 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.