மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க பவுன்ராஜ் எம்எல்ஏ கோரிக்கை

சென்னை

சென்னை, ஜூலை 17: பூம்புகார், சீர்காழி, திருவிடை மருதூரையை இணைத்து மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளதார்.

சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் கலந்துகொண்டு பேசியதாவது:-
மயிலாடுதுறையிலிருந்து சென்னை மற்றும் கோயம்புத்தூருக்கு குளிர்சாதனப் பேருந்து இயக்க வேண்டுகிறேன். பூம்புகார் தொகுதி, காலமநல்லூர் ஊராட்சி, சின்னமேடு மீனவர் கிராமத்தில் கடல் அரிப்பால், கடல்நீர் உட்புகும் நிலை உள்ளது.

கற்கள் கொட்டி, கடல் நீர் உட்புகாமல் தடுத்து மக்கள் குடியிருப்பு பகுதியை பாதுகாக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். காலமநல்லூரில் செல்லும் அம்மன் ஆற்றின் குறுக்கே கடல்நீர் உட்புகுந்து விளைநிலம் உவர் நிலமாகவும், குடிநீர் உப்பு நீராகவும் மாறியுள்ளதால், இப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, கடல்நீர் உட்புகாமல் தடுக்க தடுப்பணை கட்டித்தர வேண்டுகிறேன்.

காவிரிபூம்பட்டினம் எனப்படும் பூம்புகாரில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகள், கட்டிடங்கள் வசதிகள், பொழுதுபோக்கு அம்சங்கள், சிறுவர்கள் விளையாடும் பூங்காக்கள் போன்றவைகள் புதிதாக அமைத்து தந்து, மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றித் தந்திட வேண்டுகிறேன். சுற்றுலாத்துறை தொடர்பான அறிவிப்பில், இதுகுறித்து இடம்பெறாதது எனது தொகுதி மக்களுக்கும், எனக்கும் மிகுந்த மனவருத்தத்தை தருகிறது.

பூம்புகார் தொகுதியில் கடற்கரைப் பகுதி மீனவ மக்கள் பயன்பெறும் வகையில், பூம்புகார், வானகிரி, சின்னங்குடி, மருதம்பள்ளம், மாணிக்கப்பங்கு, தரங்கம்பாடி வழியாக பொறையாறுக்கும், பூம்புகாரிலிருந்து தரங்கம்பாடி, காரைக்கால் வழியாக நாகப்பட்டினத்திற்கும் புதிய வழித்தடங்களை உருவாக்கி போக்குவரத்து வசதி செய்து தர வேண்டுகிறேன். பூம்புகார் தொகுதி, குத்தாலத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்து தர வேண்டுகிறேன். மயிலாடுதுறையை தனிமாவட்டமாக்க வேண்டும்.