சென்னை, ஜூலை 17: மீஞ்சுர் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 28). இவர் ஈக்காட்டுதாங்கலில் தனியார் வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் விளம்பர ஏஜென்சி வைத்து நடத்திவருகிறார்.

கடந்த 9-ம் காரில் புறப்பட்டு சென்ற இவர், அன்றைய தினம் முதல் வீடு திரும்பவில்லை. இது குறித்து, கார்த்திகேயனின் தந்தை கந்தசாமி (வயது 66) அமைந்தகரை போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதற்குள், கந்தசாமிக்கு மர்மபோன் அழைப்பு வந்துள்ளது, அதில் பேசிய நபர் ரூ. 60 லட்சம் தந்தால்தான் கார்த்திகேயனை விடுவிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த செல்போன் எண்ணை கைப்பற்றி இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

அதனடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானைக்கு விரைந்த தனிப்படை போலீசார், அங்கு அடைத்துவைக்கப்பட்டிருந்த கார்த்திகேயனை மீட்டனர். இது தொடர்பாக, கோபிநாத் (வயது 35), கண்ணன் (வயது 40) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலை வாங்கி தருவதாக கூறி வேலையும், வாங்கி தரவில்லை, பணமும் திருப்பி தரவில்லை என்பதால், கார்த்திகேயனை கடத்தியதாக அவர்கள் போலீசிடம் தெரிவித்துள்ளனர்.