ரேபரேலி, ஏப்.11:மக்களவை தேர்தலில், உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் போட்டியிடும் காங்கிரஸ் முன்னாள் தலைவர்
சோனியா காந்தி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதனையொட்டி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் குடும்பத்தினர் கலந்துகொண்ட சிறப்பு பூசை நடைபெற்றது. அதன் பின்னர் ரேபரேலிக்கு வந்த சோனியா காந்தி அங்கு சாலையில் கட்சி தொண்டர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்தார்.

பின்னர் ரேபரேலியில் தேர்தல் அதிகாரியிடம் சோனியா காந்தி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.சோனியா காந்தியுடன், காங்கிரஸ் தலைவரும், மகனுமான ராகுல் காந்தி, அவரது மகள் பிரியங்கா மற்றும் குடும்பத்தினர் வந்தனர்.

ரேபரேலி தொகுதியில் அடுத்த மாதம் 6-ந் தேதி 5-வது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் சோனியா காந்தி 5-வது முறையாக களமிறங்குகிறார்.

சோனியாவை எதிர்த்து மூத்த காங்கிரஸ் தலைவராக இருந்து, அண்மையில் விலகி பிஜேபியில் சேர்ந்த தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார். சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை சோனியாவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தாததால் அங்கு நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியை ராகுல் காந்திக்கு விட்டுக் கொடுத்த சோனியா, தனது மாமியார் இந்திரா காந்தி வென்ற தொகுதியான ரேபரேலியில் போட்டியிட்டார்.

இரட்டை ஆதாயம் பெறும் பதவியில் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து ராஜினாமா செய்த சோனியா, 2006ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் வென்றார்.அதனைத் தொடர்ந்து 2009, 2014 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் அவர் தொடர்ந்து வெற்றிப்பெற்றார்.