மைனா படம் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்த அமலாபால், இயக்குநர் ஏ.எல். விஜய்யை திருமணம் செய்துக்கொண்டார். மூன்று வருடங்கள் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2017-ம் ஆண்டில் அவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

இதற்குபின்னர், மீண்டும் திரைப்படங்களில் நடித்துவரும் அமலாபால், வேறொருவரை காதலிப்பதாகவும் அவருடன் ஒன்றாக பாண்டிச்சேரியில் வசித்து வருவதாகவும் செய்திகள் பரவின. இந்த செய்தியை பற்றி இதுவரை அமலா பால் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் இருந்தார்.

இந்த நிலையில், தான் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்தின் புரோமோசனுக்காக அளித்த பேட்டியில் தன் புதிய காதலரைப்பற்றி மனம் திறந்துள்ளார். நான் என் பார்ட்னரை கேட்ட பிறகு தான் எல்லா முடிவுகளையும் எடுப்பேன். ‘ஆடை’ பட கதையை கேட்ட போது அவரிடம் ஆலோசித்தேன்.

அவர் இது ஒரு அருமையான வாய்ப்பு. முதலில் உன்னை தயார் செய்துகொள், உடலாலும் மனதாலும் முழுமையாய் தயாராகி இதைச் செய் என்று சொன்னார். அவரால்தான், இப்படத்தை ஒத்துக்கொண்டேன். ஒரு தாயால் தான் முழு தியாகம் செய்ய முடியும் என நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதை உடைத்தவர் அவர். எனக்காக அவரது வேலை, திட்டங்கள் அனைத்தையும் ஒத்தி வைத்து எனக்காக எப்போதும் துணை நிற்கிறார், என்றார்.

ஒரு அபார்ட்மெண்ட்டுக்குள் நிர்வாணமாக மாட்டிக்கொள்ளும் பெண்ணின் கதையை திரில்லாக சொல்லும் படமாக இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை படம் உருவாகியுள்ளது, குறிப்பிடத்தக்கது.