சென்னை, ஜூலை 18:  போரூரை அடுத்துள்ள ஐயப்பன்தாங்கல் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தவர், துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சுனிதா (வயது 35) என்பவரை பார்க்க, அவரது தம்பி தீபக் (வயது 25) என்பவர் நேற்றிரவு 10.30 மணியளவில் கேரளாவில் இருந்து காரில் வந்தார். இவரை, உள்ளே விட வேண்டாம் என்று சுனிதா ஏற்கனவே, காலாளிகளிடம் கூறியிருந்தார்.
இதனால், தீபக்கை உள்ளே விடாமல் காவலாளிகள் தடுத்தனர்.

இதை மீறி, அவர் உள்ளே செல்ல முயன்றபோது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென தீபக் காரில் இருந்த துப்பாக்கியை எடுத்துவந்து வானத்தை நோக்கி சுட்டார். நள்ளிரவில் கேட்ட துப்பாக்கி சத்தத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்ததும், தீபக் தனது காரில் ஏறி தப்பியோடிவிட்டார்.

இது குறித்து, மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.