சென்னை, ஜூலை 18: சென்னை நகரில் முதன்முதலில் சங்கிலித்தொடர் ஓட்டல்களை நடத்தி உலகப்புகழ்பெற்ற சரவண பவன் அதிபர் ராஜகோபால் இன்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற போதிலும் உடல்நிலை காரணமாக சிறைக்கு அனுப்பப்படாமல் சிகிச்சை பெற்று வந்த போது அவருக்கு இந்த துயர முடிவு ஏற்பட்டது.

அவருக்கு வயது 72. மனைவி வள்ளியம்மை, மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

சரவணபவன் ஓட்டலில் வேலை பார்த்த ஊழியரின் மகள் ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கடத்திச் சென்று கொடைக்கானலில் கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் சரவண பவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால். கீழ் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை நடந்த அந்த வழக்கில், ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

உடல் நிலை மோசமாக இருந்ததால் நீதிமன்ற உத்தரவின்படி ஆஜராக முடியாத நிலையில் இருந்தார். நீதிமன்றம் கண்டிப்பாக ஆஜராக உத்தரவிட்டதை அடுத்து, மருத்துவமனையில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். சிறைக்குக் கொண்டுசெல்லும் வழியில் அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ராஜகோபாலின் உடல்நிலை கவலைக்கிடமானது.

இதனை தொடர்ந்து அவரது மகன் சரவணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனது தந்தை ராஜகோபாலை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்க சிறைத்துறை தலைவருக்கு மனு அளித்தேன். ஆனால் அது பரிசீலிக்கப்படவில்லை. எனவே எனது மனுவை பரிசீலனை செய்து எனது தந்தையை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரரேஷ், நிர்மல்குமார் ஆகியோர், ராஜகோபாலின் உடல்நிலை பற்றி அறிக்கை அளிக்க ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர்.

இதனை ஏற்று ஆஸ்பத்திரி டீன் தாக்கல் செய்த மனுவில், ராஜகோபாலை இடமாற்றம் செய்வது அபாயமானது. இதனால் அசம்பாவிதம் நடந்தால் அரசு டாக்டர்கள் பொறுப்பு கிடையாது என்று கூறியிருந்தார். ராஜகோபால் சுயநினைவின்றி இருப்பதாகவும், அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு பதில் அளித்த மனுதாரர் தரப்பு வக்கீல் ராஜகோபாலுக்கு ஏற்படும் ஆபத்துக்கு மனுதாரரே முழு பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்று கூறி இருந்தார். சிகிச்சை செலவை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதிகள், ராஜகோபாலை தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்ற உத்தரவிட்டனர். மனுதாரர் தனது சொந்த செலவிலேயே தந்தையை இடமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்றும், இதனால் ஏற்படும் எந்தவித அசம்பாவித்துக்கும் தமிழக அரசு பொறுப்பு ஏற்காது என்றும் உத்தரவிட்டனர்.

இதனை தொடர்ந்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 16-ம் தேதி அனுமதிக்கப்பட்ட அவர், இரண்டே நாளில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.