சென்னை, ஜூலை 18: செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமும், தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு மற்றொரு புதிய மாவட்டமும் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டசபையில் அறிவித்தார்.

இதன் மூலம் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்கிறது.

சட்டசபையில் அவை விதி எண்  110-ன் கீழ் அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

நூற்றாண்டு கண்டு சரித்திரம் படைத்துள்ள விழுப்புரம் நகராட்சி மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய, ரூ.50 கோடி வழங்கப்படும்.

சர்வதேச மலர்கள் ஏல மையம் ஒன்று 20 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் ஓசூரில் அமைக்கப்படும். இம்மையம், மலர்கள் பயிரிடும் விவசாயிகளுக்கு அதிக வருமானம் ஈட்டித் தருவதுடன், கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி, அந்நிய செலாவணியையும் அதிகரிக்கும்.

நிர்வாக வசதிக்காக திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும். இவ்விரு மாவட்டங்களுக்கும் தலா ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி தனி அதிகாரியாக நியமிக்கப்படுவர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், சூரிய ஒளியில் செயல்படும் மீன் உலர் கூடங்கள் அமைக்கவும், மீன்வள சூழலை மீள ஏற்படுத்த செயற்கை உறைவிடங்கள் அமைக்கவும், கடல் / உவர் நீர் மீன் குஞ்சு வங்கி அமைக்கவும், ஒருங்கிணைந்த கடல் மீன் வளர்ப்பு அலகுகள் அமைக்கவும், மீனவ மக்களின் மாற்று வாழ்வாதாரத்திற்காக மெல்லுடலிகள் மற்றும் கடற்பாசி வளர்ப்பு அலகுகள் ஏற்படுத்தவும், மீனவ இளைஞர்களுக்கு நடமாடும் மீன் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தவும், 31.15 கோடி ரூபாய் செலவில் வழிவகை செய்யப்படும்.

மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகின்றது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டமும், ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் வட்டாட்சியர் தலைமையில் அம்மா திட்ட முகாம்களும் நடத்தப்படுகிறது. விவசாயிகள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைகளை தீர்வு காண்பதற்கான சிறப்பு குறை தீர்வு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.