சென்னை, ஜூலை 18:  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி நளினி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, அதை ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரை மீது ஆளுநர் முடிவெடுக்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த எட்டு மாதங்களாக அமைச்சரவை பரிந்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியிருந்தார் .

இந்த மனுவை நீதிபதிகள் ஆர். சுப்பையா, சி.சரவணன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது, நளினி தரப்பில், அரசியல் சாசன அதிகாரம் கொண்ட ஆளுநர் அமைச்சரவையின் பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எட்டு மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை எதிர்த்து தான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆளுனருக்கு சட்ட பாதுகாப்பு இருந்தாலும், அமைச்சரவை பரிந்துரை மீது எந்த முடிவும் எடுக்காமல் இருக்க முடியாது.
அமைச்சரவை பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காத காரணத்தினால் மனுதாரர் உள்ளிட்ட ஏழு பேரும் சட்டவிரோத காவலில் இருப்பதாகவே கருதப்படும் என வாதிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. அவருக்கு சட்டப் பாதுகாப்பு இருக்கிறது. மேலும் 7 பேர் விடுதலை விவகாரத்தைப் பொறுத்தவரை அது, ஆளுநரின் பரிசீலனையில் நிலுவையில் இருக்கிறது என்று தெரிவித்தார்.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா என்பது குறித்த வாதத்தின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். அந்த மனு மீது இன்று தீர்ப்பளித்தனர். அதில், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. அமைச்சரவை பரிந்துரை மீது முடிவெடுக்கும்படி ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்ய முடியாது. ஆகவே, இந்த வழக்கு மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.