சட்டசபையில் ஓட்டெடுப்பை தாமதப்படுத்தும் குமாரசாமி

TOP-4 இந்தியா

பெங்களூரு, ஜூலை 18: கர்நாடகத்தில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதள கூட்டணி அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தை தாமதப்படுத்தும் வகையில் இருகட்சிகளும் ஒவ்வொரு பிரச்சனையாக எழுப்பி வருகின்றன. இதற்கு பிஜேபி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் தனது அரசு மீது நம்பிக்கை கோரி முதலமைச்சர் குமாரசாமி பேசிவருகிறார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ராஜினாமா செய்த எம் எல் ஏக்கள் சுயமரியாதை இல்லாதவர்கள். சபாநாயகரின் அதிகாரத்தை கேள்விகுறியாக்கும் வகையில் சில எம் எல் ஏக்கள் செயல்பட்டனர்.
கர்நாடகவில் நடப்பதை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். சட்டப்பேரவையில் விவாதம் நடத்த ஏன் பயப்படுகிறீர்கள். எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை உடனே ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

கூட்டணி அரசை தொடர்ந்து நடத்துவேனா, இல்லையா என்ற கேள்விக்கு பதில் அளிக்க இங்கு நான் வரவில்லை. ஆட்சியை எப்படியாவது கவிழ்த்து விடவேண்டும் என்று எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு செயல்படுகின்றனர்.

வாக்கெடுப்பை இன்றே நடத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க கூடாது. எம்.எல்.ஏக்கள் சபாநாயகரிடம் ஒரு வரியில் ராஜினாமா செய்வதாக கூறிவிட்டு, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு காரணங்களை கூறுகின்றனர்.

அரசியல் குழப்பத்திற்கு எம்எல்ஏக்கள் ராஜினாமா தான் காரணம். நாடாளுமன்ற பிரசாரத்தின்போது கூட்டணி ஆட்சி குறித்து தொடக்கம் முதலே சிலர் தவறான தகவல் பரப்பி வருகிறார்கள்.

பிஜேபி ஆட்சியில் நடந்த நில ஊழலில் பலர் தப்பிக்க வைக்கப்பட்டு உள்ளனர்.

எடியூரப்பா பேசும் அன்றைய சூழல் வேறு, தற்போதைய நிலை வேறு . ஊழல் குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க நாங்கள் தயார். எடியூரப்பாவிற்கு திடீரென என் மீது கருணை ஏற்பட்டுள்ளது, அதற்கு நான் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் .எடியூரப்பா ரொம்ப அவசரப்படுகிறார் என கூறினார்.