சென்னை, ஜூலை 18:மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியிருக்கிறார். சட்டசபையில் இந்த பிரச்சனையை துணை கொறடா பிச்சாண்டி கவனஈர்ப்பு தீர்மானமாக எழுப்பினார். மனித கழிவுகளை மனிதர்கள் அகற்ற நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அதையும் மீறி மனிதர்கள் ஈடுபடுத்தப்படுவதால் 144 பேர் உயிரிழந்துள்ளனர். பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை, அரசை விட தனியார் நிறுவனங்கள் தான் இதில் ஈடுபடுகின்றன. இதில் உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு இன்னல் ஏற்படுகிறது. இதை தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் எஸ்.பி, வேலுமணி கூறியதாவது:- மனித கழிவுகளை மனிதர்களே அகற்ற 1993-ம் ஆண்டே தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை கடுமையாக கடைப்பிடிக்காததால் மனித கழிவுகளை அகற்ற மனிதர்களே ஈடுபடுத்தப்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. அரசு தரப்பில் ஈடுபடுத்தப்பட்ட 40 பேர் 2015 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளனர், அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

தனியார் துறையினர் ஊழியர்களை ஈடுபடுத்துவதில் 161 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களிடமிருந்து இழப்பீட்டு நிதி வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை 2015-ல் கடுமையாக்கி இருக்கிறோம். இருந்தாலும் அனைவரிடமும் விழிப்புணர்வு அவசியம். மனித கழிவுகளை அகற்ற ஊழியர்கள் செல்லக்கூடாது.

தமிழகம் முழுவதும் கழிவுகளை அகற்ற 577 இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. 8 ஆண்டுகளில் மட்டும் 457 இயந்திரங்கள் வாங்கி கழிவுகளை அகற்ற பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அவர¢கூறினார்.