பெங்களூரு, ஜூலை 18: கடைசி நேர கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட சந்திராயன்-2 விண்கலம் வரும் 22-ம் தேதி பிற்பகல் 2,43 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நிலவுக்கு ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்திற்கு ஜிஎஸ்எல்வி-எம்கே 3 ராக்கெட் மூலம் கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் ஏவப்படுவதாக இருந்த சந்திராயன்-2 விண்கலம் கடைசி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

ராக்கெட் எஞ்சினில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போது இந்த கசிவு நிவர்த்தி செய்யப்பட்டு இருப்பதுடன் மேற்கொண்டு இதுபோன்ற கோளாறு ஏற்படாதவாறு என்ஜினில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து வரும் ஜூலை 22-ம் தேதி பிற்பகல் 2,43 மணிக்கு சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றவகையில் கவுண்டவுன் தொடங்கப்படும்.