சென்னை, ஜூலை 18: வட்டித்தகராறில் பெண்ணை கொலை செய்து ஆட்டோவில் சடலத்தை கடத்திச்சென்று மதுராந்தகம் அருகே சாலையோரம் உள்ள கிணற்றில் வீசிவிட்டு வந்த 2 பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் இருதயநாதன் (வயது 54). இவரது மனைவி அல்போன்சா மேரி (வயது 43). இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த 1994-ம் ஆண்டு முதல் சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் வசித்து வருகின்றனர்.

அந்த பகுதியில் மேரி வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 15-ம் தேதி மீன் வாங்கிவருவதாக கணவரிடம் கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களிலும் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்காததால் இருதயநாதன் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அல்போன்சா மேரியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மதுராந்தகம் அருகே சாலையோரம் உள்ள ஒரு கிணற்றில் பெண் சடலம் சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்டிருந்தது தெரிய வந்தது. போலீசார் அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ததில் அது மேரியின் உடல் என்பது தெரியவந்தது இது குறித்து ஐஸ் ஹவுஸ் போலீசாருக்கு தகவல் தெரிக்கப்பட்டது.

போலீசார் அல்போன்சா மேரி செல்போன் விவரங்களை வைத்து விசாரணை நடத்தியதில் காணாமல் போன அன்று இவர் ராயப்பேட்டையில் வசிக்கும் வள்ளி என்பவர் வீட்டிற்கு சென்றது தெரியவந்தது. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ராயப்பேட்டை சேர்ந்த வள்ளி, தேவி, மணிகண்டன், சுரேஷ் ஆகியோருக்கு வட்டிக்கு பணம் கொடுத்ததில் தகராறு ஏற்பட்டது தெரிய வந்தது.

சம்பவ தினத்தன்று இவர்கள் வட்டி பணம் தருவதாக அல்போன்சா மேரிக்கு போன் செய்துள்ளனர். அதன் பேரில் அவர்கள் வீட்டிற்கு சென்று பணம் கேட்ட அல்போன்சா மேரியை அவர்கள் சேர்ந்து தாக்கி கொலை செய்தனர். பின்னர் மேரியின் நகைகளை கழற்றி கொண்டு அவரது உடலை பிளாஸ்டிக் கோணியில் கட்டி, ஆட்டோ டிரைவர் ஒருவரிடம் ஆட்டோவை இரவலாக வாங்கி அதில் வைத்து கடத்தி சென்று மதுராந்தகம் அருகே சென்று சாலையோரமாக உள்ள கிணற்றில் வீசிவிட்டு திரும்பி உள்ளனர்.

பின்னர் தங்க நகைகளை அயனாவரத்தில் உள்ள ஒரு அடகு கடையில் வைத்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணம் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து இந்த கொலை தொடர்பாக வள்ளி, மணிகண்டன் அவரது மனைவி தேவி மற்றும் சுரேஷ் ஆகிய 4 பேரை ஐஸ் ஹவுஸ் போலீசார் கைது செய்தனர்.