சென்னை, ஜூலை 18: பீகார் மாநிலத்தில் இருந்து ஆலப்புழா செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை 4 மணி அளவில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வந்தது. இந்த ரெயிலில் கஞ்சா மூட்டைகள் கடத்தி வரப்படுவதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் ரெயில் பெட்டிகளில் சோதனை செய்தனர். அப்போது பாத்திர மூட்டைகளில் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக இரண்டு பெண்கள் உட்பட 3 பேரை மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த பாத்திர மூட்டைகளில் 110 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் ஆந்திர மாநிலத்தில் இருந்த இந்த கஞ்சா கடத்தி வரப்பட்டதாக கருதப்படுகிறது. இது குறித்து போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.