சென்னை, ஜூலை 18: ஏலச்சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்ட தம்பதி உட்பட 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
சென்னை புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு எதிரே கடந்த 10 வருடங்களாக அரிசி மண்டி வைத்து நடத்தி வருபவர் கண்ணன்.

இவரது மனைவி கௌரி. மைத்துனர் சதீஷ். இவர்கள் மூவரும் சேர்ந்து ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். இதனை நம்பி லட்சக்கணக்கில் பணம்போட்டவர்களுக்கு, பணம் திருப்பி அளிக்கப்படவில்லை என்று அடுக்கடுக்கான புகார் எழுந்தது.

இது தொடர்பாக, ஊரப்பாக்கத்தை சேர்ந்த அருண்குமார் (வயது 45) உட்பட 30-க்கும் மேற்பட்டவர்கள் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார்அளித்துள்ளனர்.  இதன்பேரில், இன்ஸ்பெக்டர் ஜோஸ்லீன் மேரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்த நிலையில், கண்ணன், கௌரி, சதீஷ் ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர்.

இதனால், இவர்களின் உறவினர் நாகராஜனை பிடித்து விசாரணை நடத்தியதில், குற்றச்சாட்டு உறுதியானதையடுத்து, மோசடியில் தொடர்புள்ளதாக கூறி நாகராஜனை போலீசார் கைது செய்தனர்.
அதை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் விக்ரமசிங்கபுரம் பகுதியில் பதுங்கியிருந்த கண்ணன், கௌரி, சதீஷ் ஆகிய மூவரையும் போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.  இவர்களிடம் ஏலச்சீட்டு போட்டு, போலீஸ் குடும்பத்தினரும் ஏமாந்துபோனதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.