சென்னை, ஜூலை 18: தரமான சைவ உணவின் சுவையை உலகம் முழுவதும் பரப்பி புகழ் பெற்ற சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால், உழைப்பால் உயர்ந்தவர் ஆவார். நெல்லை மாவட்டம் புன்னையடி எனும் பஸ் வசதி கூட இல்லாத ஒரு குக்கிராமத்தில் 1947-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் ராஜகோபால். வறுமை காரணமாக ஏழாம் வகுப்பிலேயே படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஓர் உணவகத்தில் டேபிள் துடைக்கும் வேலையில் சேர்ந்தார்.

சில நாட்களில் தேநீர் போட கற்றுக்கொண்ட அவர், அதைத் தொடர்ந்து, ஒரு மளிகை கடையில் பணிபுரிந்தார். தன் தந்தை மற்றும் மைத்துனரின் உதவியுடன் சொந்தமாக ஒரு மளிகை கடையை ஆரம்பித்தார். தொழில் ரீதியில் இதுவே அவருக்கு முதல் முயற்சி.

இளம் வயதிலேயே தொழிலில் பல சவால்களை எதிர்கொண்ட ராஜகோபால், 1981-ம் ஆண்டு முதல் முதலாக கே.கே.நகரில் சரவண பவன் ஓட்டலை தொடங்கினார். சுவையைக் காட்டிலும் பசி தீர்ப்பதே முக்கியம் என்ற போக்கு நிலவிய காலகட்டத்தில், சுவையான மற்றும் தரமான உணவை வழங்குவதே தாரக மந்திரமாகக் கொண்டு செயல்பட்டதால் தற்போது இந்தியாவில் 33 கிளைகளுடனும், வெளிநாடுகளில் 45-க்கும் மேற்பட்ட கிளைகளுடனும் ஆலமரமாக வளர்ந்து நிமிர்ந்து நிற்கிறது.

தரமான, சுவையானது உணவை வழங்கியதால் ஆரம்ப காலத்தில் நஷ்டத்தையே சந்திக்க நேர்ந்தது. ஆனால், உணவகம் மீதான மதிப்பு கூடக் கூட, அந்த இழப்புகள் எல்லாம் லாபங்களாக மாறத் தொடங்கின. ஊழியர்களின் பணிச்சூழலை மேம்படுத்தியதுடன் அவர்களுக்கு வாழ்க்கைப் பாதுகாப்பும் அளித்தார்.

ஊழியர்களுக்கு காப்பீடு, அவர்களது குழந்தைகளின் கல்விக்கு உதவி, குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா செல்ல உதவித்தொகை உள்பட பல்வேறு நலத்திட்டங்களை தனது நிறுவனத்தில் அவர் செயல்படுத்தி காட்டினார்.

ஊழியர்களின் தோற்றப்பொலிவுக்கு முக்கியத்துவம் அளித்ததுடன¢அவர்கள் சுகாதாரமான சீருடை அணிந்து வாடிக்கையாளர்களை இன்முகத்துடன் கவனித்து கொள்ள வைத்ததால் ஓட்டல் தொழில் மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்தது. தட்டின் மீது வாழையிலையை வைக்கும் முறையை முதன்முதலாகக் கொண்டு வந்து சுகாதாரமான முறையில் உணவுகளை பரிமாற வழிவகுத்தார்.

கிருபானந்த வாரியார் மீது அளவிலா பக்திகொண்ட ராஜகோபால், அவரை வைத்தே பல கிளைகளை திறந்தார். அவருக்கு காங்கேயநல்லூரில் மணி மண்டபமும் கட்டினார். உழைப்பால் உயர்ந்த ராஜகோபால், பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி இருந்ததால் அதலபாதாளத்திற்கு செல்ல நேர்ந்தது.

தொழிலும் வசதி வாய்ப்புகளும் பெருகிய போதிலும், ஜீவஜோதி என்ற பெண்ணின் மீது கொண்ட மையலின் காரணமாக அவரது கணவரை கொன்று ஆயுள்தண்டனை பெற்றார்.