22 பேர் குடும்பத்திற்கு நிவாரண உதவிகள்

சென்னை

சென்னை, ஜூலை 18: சாலை விபத்து உள்ளிட்ட பல்வேறு விபத்துக்களில் உயிரிழந்த 22 பேர் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்ட மன்றத்தில் அறிவித்தார். பேரவை விதி 55-ன் கீழ் முதலமைச்சர் இன்று உரையாற்றியபோது பல்வேறு எம்எல்ஏக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் கீழ் கண்டவாறு நிவாரண உதவிகளை அறிவித்தார்.

ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், ஓடத்துறை கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவரின் மகன் சிவபாலன்; ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், சாயல்குடி கிராமத்தைச் சேர்ந்த ரேவதி என்பவரின் கணவர் விஜயராமலிங்கம்; நாமக்கல் மாவட்டம், பரமத்தி-வேலூர் வட்டம், பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் முத்துகிருஷ்ணன்; கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், அர்த்தநாரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் காளிதாஸ் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், கல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் மகன் ராதாகிருஷ்ணன்; திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பெருஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி என்பவரின் கணவர் விஸ்வநாதன் மற்றும் குமார் என்பவரின் மகன் செல்வன் தட்சணாமூர்த்தி;
சென்னை மாவட்டம், ஆலந்தூர் வட்டம், முகலிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரகலா என்பவரின் மகன் மணிகண்டன் மற்றும் கீதா என்பவரின் மகன் மோகன்;ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், வைரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பன் என்பவரின் மகன் செல்வக்குமார் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 22 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிவபாலன், விஜயராமலிங்கம், முத்து கிருஷ்ணன், காளிதாஸ், ராதாகிருஷ்ணன், விஸ்வநாதன், செல்வன் தட்சணாமூர்த்தி, ரெங்கசாமி, செல்வி சுவாதி மற்றும் பாம்பு கடித்து உயிரிழந்த செண்பகவள்ளி ஆகியோரின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்தும்; சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த செல்வன் ராஜன் என்பவரின் குடும்பத்திற்கு நான்கு லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும்; சாலை விபத்தில் உயிரிழந்த மணிகண்டன் மற்றும் அவருடைய மனைவி மீனாட்சி செல்வி, மணிகண்டன், மோகன், திரு. தம்பூட்டு என்கிற திருமுருகன், செல்வக்குமார் செல்வன் பார்த்திபன், பழனிசாமி, பார்த்திபன், கருத்தப்பாண்டியன்; கடலில் மூழ்கி உயிரிழந்த வேணுகுமார், நாய் கடித்து உயிரிழந்த சிறுவன் தருண் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.