சென்னை, ஜூலை 18: கொருக்குப்பேட்டையில் காதலன் இறந்த துக்கம் தாளாமல், பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொருக்குப்பேட்டை பாரதி நகர் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் வசித்துவருபவர் அண்ணாதுரை. இவரது மகள் அர்ச்சனா (வயது 16). அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 1 படித்துவந்துள்ளார்.

இவரும், அதே பகுதியை சேர்ந்த இளங்கோ (வயது 18) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இளங்கோ, மேற்கொண்டும் படிக்காமல், வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றிக்கொண்டிருந்ததாலும், அர்ச்சனா இன்னும் பள்ளிப்படிப்பையே முடிக்கவில்லை என்பதாலும், இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த இளங்கோ கடந்த 10 நாட்களுக்குமுன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.  காதலன் இறந்த துக்கம் தாங்கமுடியாமல் தவித்து வந்த அர்ச்சனாவை, ஜே.ஜே.நகரில் உள்ள அவரது பாட்டி வீட்டுக்கு பெற்றோர் அனுப்பிவைத்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலை பாட்டி கடைக்கு சென்றுவிட்டு, 9 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது, அர்ச்சனா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
தகவலறிந்துவந்த ஆர்.கே.நகர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.